தாக்குதல் நடத்தும் காணொளியை Tiktok இல் வெளியிட்ட 8 பேர் யாழில் கைது! வாள்களும் சிக்கின

பணத்தைப் பெற்றுக்கொண்டு தாக்குதல் நடத்தும் கும்பலைச் சேர்ந்த 8 பேரை யாழ். வடமராட்சி – நெல்லியடியில் தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அந்தக் காணொளியை ரிக்ரொக் செயலியில் வெளியிட்டிருக்கின்றது இந்தக் கும்பல் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 10 நாள்களாகத் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இவர்களைக் கைது செய்தனர்.

10 நாள்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பஸ்தர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. படுகாயடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதல் நடத்தும் காணொளி பதிவு ரிக்ரொக் செயலியில் வெளியிடப்பட்டது. அதில் தாக்குதல் நடத்துவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், குற்றவாளிகளை அடையாளம் கண்ட பொலிஸார் அவர்களைத் தேடி வந்தனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு 8 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுகின்றது என்றும், இவர்கள் பணம் பெற்றுக்கொண்டு கூலிப் படையாக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் எட்டுப் பேரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles