சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
திபெத்தின் நாகு நகரத்தில் உள்ள பாகென் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக சீன நிலநடுக்க வலைப்பமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வால் பாகென் மாவட்டத்தில் குறைந்தது 339 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 32 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; எஞ்சிய 21 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளிலும் கார்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 3 முதல் 4 ரிக்டர் அளவில் தொடர் அதிர்வுகளும் (Aftershocks) பதிவாகியுள்ளன.
நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,864 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மக்கள் தொகை குறைந்த பகுதியாகும். இருப்பினும், திபெத் தலைநகர் லாசாவிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள இப்பகுதியில் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிர மீட்பப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
2024 ஜனவரி மாதத்திற்குப் பிறகு சீனாவில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 2025 ஜனவரியில் திபெத்தின் டிங்ரி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பேரும், 2010-இல் கிங்ஹாய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,600-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
