திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.
குறிப்பாக திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையிலேயே தேசிய மக்களின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சரவைக்குள் இருந்து கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சர்ச்சைக்குரிய நிலக்கரி மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் அண்மையில் பதவி விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










