கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் , அவர்களை பார்வையிடவந்தார் எனக் கூறப்படும் நபர் வழங்கிய நஞ்சு கலந்த பால் பொதிகளை அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தி யசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபர், அதற்காக உளவு தகவல் வழங்கிய நபர் ஆகியோரே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட பால் பக்கட்டை வழங்கிய பின்னர் அருந்திய கைதிகளில் ஒருவர் உடனடியாக மயங்கி வீழ்ந்துள்ளார்.
சற்று நேரத்தில் மற்றவரும் மயங்கி வீழ்ந்துள்ளார். அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்தவர் எனக் கூறப்படும் நபர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ ரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்துவருகின்றனர்.