இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் 13 ஆம் திருத்தம் உட்பட்ட நகர்வுகள்
அதிகம் பேசப்பட்டுவரும் நிலையில், இதுவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிவரும் கோபால் பாக்லேவுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்”பத்திரிகை நேற்று இச்செய்தியை வெளியிட்டிருந்தது.
கோபால் பாக்லேயின் இடத்துக்கு பிறஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராக உள்ள சந்தோஷ் ஜா நியமிக்கப்படவுள்ளார் எனவும் கோபால் பாக்லே, ஆஸ்தி ரேலியாவிற்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படுவார்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான கோபால் பாக்லே, கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவருகின்றார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கையில் பணி யாற்றும் கோபால் பாக்லே, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மிக நெருக்கமான இருதரப்பு உறவைப் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவிற்கான இந்தியத் தூதுவர் பதவியில் இருக்கும் மன்பிரீட் வொஹராவின் பதவிக் காலம் டிசம்பரில் முடிவடைகின்றது. அந்த இடத்துக்கு கோபால் பாக்லே நியமனம் பெற்று, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் கன்பராவில் அந்தப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
கோபால் பாக்லேயின் கொழும்புத் தூதுவர் பதவிக்கு, இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுயாதீன வர்த்தக உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றிய சந்தோஷ் ஜா, நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விடயத்தில் சீனாவும் இந்தியாவும் தமது செல்வாக்கை செலுத்துவதற்கு முயற்சிக்கும் முக்கியமான தருணத்தில் சந்தோஷ் ஜா, உயர்ஸ்தானிகர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார்.
சீனாவின் மற்றுமொரு நட்பு நாடான பாகிஸ்தானைப் போன்று பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் சிறிலங்கா, சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மூலோபாய கரிசனைகளுக்கு இன்னும் சாதகமாக பதிலளிக்க வேண்டிய சூழல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையின் ஆழ்கடல் துறைமுகங்களில் சீனக் கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் பெலஸ்ரிக் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனு மதிப்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ள பின்னணியில் இந்தப் பதவி மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலகத்தில் கிழக்கு விடயங்களுக்குப் பொறுப்பான செயலாளராகப் பணியாற்றி வரும் சரூப் குமார், பிறஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராக நியமனம் பெறலாம் என்று கூறப்படுகின்றது.
