தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், திடீரென அவசரநிலையை பிரகடனம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவசர நிலைக்கு எதிராக வாக்களித்ததால் அவசர நிலை சட்டம் இரத்து செய்யப்பட்டது.
தென் கொரியாவில் விரைவில் வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு நாடாளுமன்றம் முடங்கியது.
வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல் தென் கொரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும், இவற்றை ஒடுக்க அவசரநிலை இராணுவ சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்தார். ஆனால் தென் கொரியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 190 உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதேவேளை தென் கொரிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறு எதிர்ப்புகள் வலுவடைந்து கொண்டே சென்ற நிலையில் தென் கொரியா ஜனாதிபதி யூன், 6 மணி நேரத்தில் தனது அவசரநிலை உத்தரவை வாபஸ் பெற்றார்.
எனினும், ஜனாதிபதி பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.