“ எனக்கு ஜனாதிபதியாகும் ஆசை இல்லை. அதற்கான தகுதியில்லை என கூறமுடியாது. இருந்தும் எல்லா விதத்திலும் தகுதியான ஒருவரை எமது அணி ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்குள் ஜனாதிபதியாகும் கனவுடன் ஹரினி இருக்கிறார் எனவும், அதனால் அவருக்கு கட்சிக்குள் வெட்டு விழுவதாகவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்திக்குள் எனக்கு எவ்வித வெட்டும் இல்லை. வெட்டு குத்து இருந்தால் அதற்குள் ஏன் இருக்க வேண்டும்? எனக்கென தொழில் உள்ளது. கற்பிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் எனக்கு அதிக விருப்பம் உள்ளது. ஆகவே வெட்டு குத்து இருந்தால் எனக்கு அதனை சகித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் அவ்வாறானதொரு நிலை கட்சிக்குள் இல்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் எனக்கு என்ன பதவி என தீர்மானிக்கப்படவில்லை. அதேபோல ஜனாதிபதியாகும் ஆசையும் இல்லை. கொள்கைகளை அமுல்படுத்தி சிறந்த அரசியல் கலாசாரம் மூலம், சமூகமாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னெடுப்பதே எமது நோக்கம்.” – என்றார்.