“தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தில் இன்று கொள்கை விளக்க உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
“உண்மையான பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றின் தேவையை நாம் கண்டறிந்துள்ளோம். அமைச்சுக்களை ஒதுக்கும்போதும் அவற்றுக்கான விடயதானங்களை தீர்மானிக்கும் போதும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது தாக்கம் செலுத்தும் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் அதேபோன்று பாரம்பரிய கைத்தொழில்கள், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் எமது அடிப்படை இலக்குகளாகும். தற்போது எமது ஏற்றுமதி பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் திருப்திகரமான நிலையில் இல்லை.
தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும். மூடப்பட்டுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன். முறைகேடுகளை ஒழித்து உயர் தரங்களுடன் கூடிய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம். ‘சிலோன் டீ’ வர்த்தக சின்னத்திற்கு உள்ள அங்கீகாரத்தை பலப்படுத்துவோம்.
தென்னையை புதிதாக பயிரிடுவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவோம். இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்நாட்டில் தயாரிக்கப்படும் இறப்பர் பாவனை, இறப்பர் சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிப்போம். செம்பனை பயிர்ச் செய்கையை நாம் முற்றாக நிறுத்துவோம்.
மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பயிர் உற்பத்தியை நாம் ஊக்குவிப்போம். விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு ஸ்திரமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கும்போது நகர மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல்வேறு துறைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் அவர்களுக்கான விடயதானங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனித வள அபிவிருத்தியை நாம் முன்னுரிமைக்குரியதாக இனங்கண்டு இருப்பதால் அமைச்சுக்களை ஒதுக்கும்போது கல்வித்துறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதில் வேறுபட்ட பொறுப்புகளுக்காக நான்கு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளோம். முன்பள்ளிப் பாடசலைகள், கல்வி மறுசீரமைப்பு, திறன் விருத்தி, அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளுக்கான கல்வி ஆகிய துறைகளுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவற்றில் உள்ள முக்கியத்துவத்தின் காரணமாகவே ஆகும்.” – என்றார்.
புதிய அரசியலமைப்பு
ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றிக்கு அதன் அரசியலமைப்பே அடிப்படையாகும். 1978 முதல் 19 முறை திருத்தப்பட்டுள்ள எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மை, சிக்கல்கள் காரணமாக தற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உறுவாகியுள்ளன.
அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்.
அதன் பின்னர் அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் போது இந்நாட்டின் அனைத்து மக்கள்சம்பந்தமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்குவோம்.