இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மாகாணசபைத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல் முறைமைகள் தொடர்பில் கலந்துரையாடி பொதுவானதொரு இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
மாகாணசபைகளுக்கான தேர்தலை 70 இற்கு 30 என்ற அடிப்படையில் கலப்பு முறையில் நடத்துவதற்கான யோசனையை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்வைத்துள்ளது. எனினும், அதனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள இ.தொ.கா, 25 தமிழ்த் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தமிழக்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.
மறுபுறத்தில் தேர்தல் முறைமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கவனம் செலுத்தியுள்ளது. வலய அடிப்படையிலான யோசனையும் அக்கூட்டணியுடன் உள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்வின்போது இந்த விடயத்தை வேலுகுமார் எம்.பி. வெளியிட்டார்.
அத்துடன் இது சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால் அனைவரும் இணைந்து முடிவெடுக்க வெண்டும், எந்த திட்டம் சிறப்பாக இருக்கின்றதோ அதனை முன்வைப்பதற்கு இ.தொ.கா. தயார் என அக்கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இவ்விவாத நிகழ்ச்சியின்போது இரு தரப்பு சந்திப்புக்கு இரு தரப்பினருமே பச்சைக்கொடி காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.