தொழிற்சங்க தலைவர் குணசிங்க சூரியப்பெரும காலமானார்!

இலங்கை தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த அவர் இறக்கும்போது வயது 77.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான இவர் கடபொல மஹிந்த மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

மத்திய மாகாண சபை உறுப்பினராகவும், நுவரெலியா மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும் கடமையாற்றிய திரு.குணசிங்க சூரியப்பெரும, மக்கள் கட்சியில் இருந்து மறைந்த விஜய குமாரதுங்கவுடன் இணைந்து பொது அரசியலில் பிரவேசித்தவர்.

குணசிங்க சூரியப்பெரும பல வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்களில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த பிரபல சமூக ஆர்வலரான சேன சூரியப்பெருமவின் மூத்த சகோதரர் ஆவார்.

குணசிங்க சூரியப்பெருமவின் இறுதி விருப்பத்தின் பிரகாரம் இறுதிக்கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி இன்று (30) மாலை 4 மணியளவில் நுவரெலியா நகரசபை மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles