பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொட்டகலை Clf வளாகத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவை தோட்ட முகாமையாளருடனும் குறித்த தோட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மேலதிக கொழுந்து பறித்தமைக்கான கொடுப்பனவுளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன்போது பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கம் இ.தொ.காவிற்கு எழுத்து மூலம் அறிவித்து கொடுப்பனவுகளை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு இக்கலந்துரையாடலில் பொகந்தலாவ பெருந்தோட்ட யாக்கங்களின் தோட்டங்களில் காவலாளிகள், பிள்ளை பராமரிப்பு நிலையங்களின் உதவியாளர்களின் தற்காலிக பணி நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இவ்விடயம் தொடர்பாக பரிசீலனை செய்து ஒருவாரத்தில் தீர்வு பெற்று தருவதாக பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் உறுதியளித்தனர்.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், இ.தொ.காவின் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பாளர் பரத் அருள்சாமி, காரியாலய உத்தியோகஸ்தர்கள், பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் மற்றும் தோட்ட தலைவர், தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.










