பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் எந்த சவால்களையும் ஏற்பதற்கு தமது சட்டத்தரணிகள் தயார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட்சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று சம்பள நிர்ணய சபை தொழில் அமைச்சிக்கூடாக வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தமை சகலரும் அறிந்ததே. இந்த விவகாரத்தில் இ.தொ.கா. விடாப்பிடியாக இருந்து இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிசெய்திருந்தது.
இ.தொ.கா பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் செயற்பட்ட குழுவினர் ஆணித்தரமாகவும், காத்திரமாகவும் முன்னெடுத்திருந்ததையும் ஆயிரம் ரூபாவை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் 20 தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிராக தடை உத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடி இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.
எனினும், எந்தவொரு சட்ட சிக்கல்களையும் எதிர்நோக்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கான தொடர்முயற்சிகளில் ஈடுபட இ.தொ.காவின் சட்டத்தரணிகள் குழு தயார் நிலையில் இருக்கிறது. அது குறித்து தற்போது நன்கு ஆராய்ந்து வருகின்றது.” – என்றுள்ளது.
