” இலங்கையின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்த மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் முகவரி அற்றவர்களாக வாழ்கின்றனர். இதனை எண்ணி ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டும். தோட்ட பகுதிகளில் ‘பார்’ அமைப்பதற்கு இடம் வழங்கப்படுகின்றது. ஏன் முகவரியும் வழங்கப்படுகின்றது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கை பிரஜையொருவர் ஒரு இடத்தில் ஆறு மாத காலம் வாழ்ந்துவிட்டால் அவருக்கு நிரந்த முகவரி வழங்கப்படுகின்றது. வாக்காளர் பட்டியலிலும் இடம் கிடைக்கின்றது. ஆனால் ஐந்து ஆறு பரம்பரைகளாக வாழ்ந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி இல்லை. இது வேதனைக்குரிய விடயமாகும். நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமப்பவர்களுக்கு ஏன் இவ்வாறு பாகுபாடு?
தோட்டப்பகுதியில் பார் திறக்கப்படுகின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. முகவரிகூட வழங்கப்படுகின்றது. டயகம தோட்டத்தில் பார் அமைப்பதற்கு அனுமதி வழங்கியது யார்?
தோட்ட கம்பனிகள் தோட்டங்களின் உரிமையாளர்கள் அல்லர். அவர்கள் குத்தகைக்கு வாங்கியவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.










