தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடும்பம் ஒன்றைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதோடு அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகம் இடம்பெறுவதில்லை. எனினும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மை மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிறுபான்மை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்கனவே வேவல்வத்தை போன்ற தோட்டங்களில் இடம்பெற்ற வன்செயல்களில் அப்பாவி தொழிலாளர்கள் தாக்கப்பட்டு உயிருக்கு அஞ்சிய நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.
மீண்டும் இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்டத் தொழிலாள குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் தோட்ட முகாமையாளர், வெளிக்கள உத்தியோகத்தர், காவல்காரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இத்தகைய மிலேச்சத் தனமான தாக்குதல்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். இந்த நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிலாளர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து அடாவடித் தங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேநேரம் சிறுபான்மை தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
