பெருந்தோட்டத் தொழிலாளர்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றிவருகின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டதாவது,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கினார். கம்பனி வழங்க மறுத்தாலும் அதனை பெற்றுக்கொடுப்போம் எனவும் உறுதியாக கூறினார். ஆனாலும் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்ற பிரதமர், ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் என சத்தியம் செய்தார். அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தும் ஆயிரம் ரூபா குறித்த உறுதிமொழியை பிரதமர் வழங்கினார். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. தொழிலாளர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது.” – என்றார்.