மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘குறைந்தபட்ச வேதனங்கள்’ (இந்திய தொழிலாளர்கள்) (திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இலங்கையர்கள். எனவே, இந்திய தொழிலாளர்கள் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது 750 ரூபாவை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஏற்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக அவர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவேண்டும்.
சட்டத்தை திருத்துவதைவிட பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்திலான புதிய சட்டம் அவசியம். அதில் அடிப்படை சம்பளமும் உரிய வகையில் நிர்ணயிக்கப்படவேண்டும். அதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவேண்டும்.” – என்றார்.