களனிவெல பிளாண்டேன் நிர்வாகத்தின் கீழான டிக்கோயா – பட்டல்கல மேற்பிரிவு தோட்டத்தில், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக விவசாயம் செய்து வரும் 10 குடும்பங்களின் காணிகளை மீள கையளிக்குமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 21 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது என நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கே.குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பட்டல்கல மேற்பிரிவில் தொழிலாளர்கள் பல வருடங்களாக வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தேயிலைச் செடிகளைப் பிடுங்கி விவசாய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவும் இல்லை. சில தொழிலாளர்கள் விவசாய திணைக்களத்தில் தம்மைப் பதிவு பதிவு செய்து கொண்டு தேவையான உரம் போன்ற உதவிகளையும் பெற்று மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அண்மைக் காலமாக கொரோனா காரணமாக தோட்டங்களில் வேலை நாட்கள் குறைவடைந்துள்ளதால் தொழிலாளர்கள் முழுமூச்சாக விவசாயத்தில் நாட்டம் கொண்டு மரக்கறி பயிர் செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் திடீரென தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் விவசாயம் செய்து வரும் காணிகளை தோட்டத்துக்குத் திருப்பித் தருமாறு 21 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளமை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் தமக்குத் தேவையான மேலதிக வருமானத்தைத் தேடிக் கொள்ள இவ்வாறு விவசாயம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தோட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாக கடிதத்தை வாபஸ் பெற்று கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளேன். அத்தோடு தோட்ட நிர்வாகத்தின் அராஜகப் போக்கை தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக விவசாய அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.
விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களும், நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றவர்களும் தமது காணிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தொழிலாளர்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளதோடு, விவசாயம் செய்கின்ற அனைவரும் தம்மை விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம். அதற்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்து ஆலோசனை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்” என்றார்.