இலங்கையின் பொருளாதாரத்தை பலிகொடுக்கும் எட்கா உடன்படிக்கையை ஜே.வி.பியின் தலைவராக அன்று எதிர்த்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று ஜனாதிபதியாக பச்சைக்கொடி காட்டியுள்ளமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
பெரியண்ணாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து தனது கொள்கையை ஜனாதிபதி காட்டிக்கொடுத்துவிட்டார எனவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் கம்மன்பில கூறியவை வருமாறு,
“ எட்கா உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை தொடர்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு பலி கொடுக்கும் எட்கா உடன்படிக்கை வேண்டாம் என்று அநுரகுமார திஸாநாயக்க கருத்தரங்கு நடத்தி இருந்தார். எட்கா உடன்படிக்கை எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.
அன்று எதிர்த்த எட்கா உடன்படிக்கையை இன்று ஏற்றது ஏன் என்பது பற்றி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் அன்று பொய்யுரைத்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும்.
சீபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக 2008 இல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இலங்கை வந்திருந்தார். எனினும், மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பால் மஹிந்த ராஜபக்ச குறித்த திட்டத்தை கைவிட்டார். இந்நிலையில்தான் சீபாவைவிட பரந்த விடயங்களை உள்ளடக்கிய எட்கா உடன்படிக்கை 2015 இல் களத்துக்கு வந்தது. இதற்கு எதிராக ஜே.வி.பி. போராட்டங்களைக்கூட நடத்தியது.
இந்தியாவுடனான இணைப்பு திட்டத்தின் தாக்கங்கள் பற்றியும் ஜனாதிபதி தேர்தலின்போது அநுரகுமார திஸாநாயக்க கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஆனால் இணைப்பு (மின்சாரம், எரிபொருள்) திட்டத்துக்கும் தற்போதைய அரசாங்கம் இணங்கியுள்ளது.
இந்திய அழுத்தங்களுக்கு பணிந்து தமது கொள்கையை ஜனாதிபதி காட்டிக்கொடுத்துவிட்டாரா?” – என்றார்
