பொலிஸ் அதிகாரியால் நடு வீதியில் வைத்து சாரதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு….
“நடந்தது என்ன? நடப்பது என்ன?” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) பிரதம ஆய்வாளர் (Chief Inspector) ஜனகாந்த எனக்கு சொன்னார்.
மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.
அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது. லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மஹரகமை பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.