நரியிடம் கோழிக்குஞ்சை ஒப்படைக்கலாமா? அரசுமீது சஜித் அணி பாய்ச்சல்

பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்றக்கு குழுவின் (கோப்) தலைமைப்பதவி ஆளுங்கட்சிக்கு வழங்கப்படுமானால் அது நரிகளிடம் கோழிக்குஞ்சுகளை ஒப்படைக்கும் செயல்போல் ஆகிவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது ஆட்சியின்போது கோப்குழுவின் தலைவர் பதவியை எதிரணி உறுப்பினருக்கு வழங்கி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினோம். ஆனால் இம்முறை கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி ஆளுங்கட்சிக்கே வழங்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவ்வாறு நடைபெறுமானால் அது நரிகளிடம் கோழிக்குஞ்சுகளை ஒப்படைக்கும் செயல்போல் ஆகிவிடும்.வகைதொகையின்றி ஊழல்கள் நடைபெறலாம். எனவே, இவ்விரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை நடுநிலைவாதிபோல் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார். அது உண்மையானால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் இவ்விரு குழுக்களிலும் ஆளுங்கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ” – என்றார்.
அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நளின் பண்டார், ’20’ ஐ சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles