” பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்று தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உப தலைவரும், ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கோப்பி யுகத்துடனேயே மலையக மக்களின் இலங்கை வருகை ஆரம்பமானது. அவ்வாறு எமது மக்கள் வருகை தந்து இவ்வருடத்துடன் 200 வருடங்களாகின்றன. இலங்கையின் பொருளாதாரத்துக்கு எமது மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கினர். நாட்டின் மேம்பாட்டுக்கு உந்து சக்தியாக இருந்தனர். இலங்கையின் பெயரை சர்வதேச மயப்படுத்தினர்.
இந்நிலையில் மலையக மக்களின் பங்களிப்பை பாராட்டி, அவர்களை கௌரவிப்பதற்காக விழா நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி ஒரு தேயிலை தொழிலாளியின் பிள்ளை என்ற வகையில் நான் பெருமைபடுகின்றேன். எமது மக்களை கௌரவிப்பதற்கு தீர்மானித்த ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐந்தரை மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி ஆட்சியை பொறுப்பேற்றார். அன்று இருந்த வரிசை யுகம் இன்று இல்லை. நாடு இயல்பு நிலையை நோக்கி பயணிக்கின்றது. சுற்றுலாத்துறை மீண்டெழ ஆரம்பித்துள்ளது. ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சும் ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறு படிப்படியாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார். எனவே, நாட்டை மீட்பதற்கு அவரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்தினால் அதற்கு பத்து பில்லியன் ரூபாவரை செலவாகும். மூன்று நாட்களில் இந்த பணத்தை அச்சிடமுடியும் என சிரேஷ்ட அரசியல்வாதி கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்கமுடியாது. கடன் வாங்குவதாலும், பணம் அச்சிடுவதாலும் நெருக்கடி நிலைமை மேலும் உக்கிரமடையும். கடன் வாங்கி இவ்வாறு செயற்பட்டதால்தான் நாடு இந்நிலைமையில் உள்ளது.” – என்றார் வேலாயுதம் ருத்திரதீபன்.










