” நான் இனவாதி அல்லன். மனக்கவலையால்தான் அன்று அப்படி கதைத்தேன். (தமிழர்களை வெட்டுவேன் – கொத்துவேன்) இதனையிட்டு கவலை அடைகின்றேன்.” – என்று மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மட்டக்களப்பு, ஜயந்திபுர பகுதியில் உள்ள மயானம் கடந்த 21 ஆம் திகதி டோசர்மூலம் இடித்தழிக்கப்பட்டது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்தே நான் மயானத்துக்கு சென்றேன். எனது தாயின் கல்லறையும் உடைக்கப்பட்டிருந்தது. எலும்புக்கூடுகளை பார்த்த பின்னர் கவலை அடைந்தேன். மன உளைத்தலுக்கு உள்ளானேன். என்னை தூண்டும் வகையில் ஊடகவியலாளர்களும் செயற்பட்டனர். அப்போது என்னால் சில அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. அந்த கருத்துகளை பிடித்துகொண்டு தமிழ்க் கூட்டமைப்பின் குழுவொன்று, தமிழ் மக்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றது. அப்பாவி தமிழ் மக்கள் இதனுடன் தொடர்புபடவில்லை. அரசியல்வாதிகளும், சில ஊடகவியலாளர்களும்தான் இனவாதத்தை விதைத்துள்ளனர்.
மயானம் இடிக்கப்பட்டதன் பின்னணியில் சாணக்கியன்தான் செயற்பட்டுள்ளார் என்ற சந்தேகம் உள்ளது.
நேற்று (நேற்று முன்தினம்) நீதிமன்றம் சென்றிருந்தேன். மயானம் அழிக்கப்பட்டதை அங்கு வந்தவர்கள் ஏற்றுக்கொண்டனர். மீள அமைத்துதருவதற்கு உடன்பட்டனர். அதேபோல மன்னிப்பும் கோரினர். நானும் அப்போது என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தால் தமிழ் மக்களுக்கு தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதற்காக கவலை வெளியிட்டேன். மனக்கவலையால்தான் அப்படி கருத்து வெளியிட்டேன். நான் இனவாதி அல்லன். இனவாதத்தை தூண்டுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.










