நாமலின் பதவி ஆசையால் மொட்டு கட்சி அழியும்!

தலைமைப்பதவிக்கு வரவேண்டும் என்ற அவசரம் நாமல் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த அவசரத்தால்தான் கட்சி அழியப்போகின்றது என்று ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவாக கருதப்படுபவரும் தற்போது ஜனாதிபதி ரணில் பக்கம் நிற்பவருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாமல் ராஜபக்சவுக்கு வரலாறு தெரியாது. 2005 இல் மஹிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்க சந்திரிக்கா மறுத்தபோது அதற்கு எதிராகவும், மஹிந்தவுக்கு ஆதரவாகவும் செயற்பட்டவனே நான். அன்று முதல் ராஜபக்சவுக்கு உதவி வருகின்றேன். அநுராதபுரம் மாவட்டத்தில் அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்துவருகின்றேன்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இதன்பிரகாரமே எனது முடிவு அமைந்தது. நான் மக்கள் பிரதிநிதி, எனக்கு மக்கள் முடிவே அவசியம்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எனது தலைமைத்துவத்துக்கு நாமல் ராஜபக்சவால் சவால் விடுக்க முடியாது. எனவே, எடுத்த முடிவை மாற்றி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுக்குமாறு நாமல் ராஜபக்சவிடம் கோருகின்றேன்.

நாமல் ராஜபக்ச போன்றவர்களின் தவறால்தான் எமது வீடுகள் அறகலய காலத்தில் எரிந்தன. நாமல் ராஜபக்சவின் அவசரத்தால்தான் கட்சி அழியப்போகின்றது. தலைமைத்துவ பதவிக்கு வரவேண்டும் என்ற அவசரம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles