ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இரண்டாக பிளவுபடும் – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் சவாலை ஏற்ககூடிய, வெற்றிபெறக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான். நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் காலம் இருக்கின்றது என அவரின் தந்தையே கூறிவிட்டார். அரசியலில் அனுபவம்பெற்ற தலைவரான மஹிந்தவின் அந்த கருத்தை அனைவரும் ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்னும் எதுவும் கூறவில்லை. களமிறங்கும் முடிவை நாமல் எடுத்தால் கட்சி இரண்டாக பிளவுபடும். தேசிய அமைப்பாளர் என்ற வகையில் அவ்வாறானதொரு முடிவை நாமல் எடுக்கமாட்டார் என்றே நம்புகின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியாது. ஆனால் போட்டியிட்டால் அவர்தான் பொருத்தமான வேட்பாளர்.” – என்றார்.