‘நினைவேந்தலை தடுக்கும் கோட்டாவின் கோமாளி அரசு’ – மனோ விளாசல்!

” 1971 இல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டா அரசு தடை போடுகிறது.

இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான்  “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக சொல்கிறது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மனோ கணேச எம்பி வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;

தொகுப்பாளர்: நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது என கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?

மனோ கணேசன்: நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது.

நான் சொல்ல முயல்வது இதுதான். அதாவது இந்த நாட்டில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் பிரச்சினை, வடகிற்கும், தெற்கிற்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட்டங்களை மேற்கொள்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என கூறப்படுகிறார்கள். இதுபற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான்.

நாம் இப்படி பார்க்கின்ற போது, 1971, 1989 ம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய JVPயினர் பயங்கரவாதிகள். LTTEயினரும் பயங்கரவாதிகள். மற்றும் இன்று அமைச்சு பதவி வகிக்கும் டக்லஸ் தேவானந்தவின் EPDP, PLOT, TELO ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.

ஆனால் இப்போதுள்ள கேள்வி, JVP இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் LTTE யிற்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, LTTEயின் பெயரை பயன்படுத்தி நினைவு கூறுவது சட்ட விரோதமானது என அரசாங்கமாக இருக்கட்டும், அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் இதனை ஒரு காரணமாக கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.

தொகுப்பாளர்:ஆனால் பிரபல நாடுகளில், அதாவது யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?

மனோ கணேசன்: (உடனடியாக இடைமறித்து..) அப்போது எவ்வாறு தெற்கில் JVP நினைவு கூருகின்றது?

தொகுப்பாளர்:JVPக்கு நினைவு கூர இடமளிக்கப்படுகின்றதா?

மனோ கணேசன்:நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை, உங்களுக்கு தெரியாதா?1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர்.

தொகுப்பாளர்:ஆம். ஆம். JVPயினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர்தாம்.

மனோ கணேசன்:இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, போஸ்டர்களை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவுக்கூறுகின்றனர்

தொகுப்பாளர்:அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்கு LTTE தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?

மனோ கனேசன்: நான் JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுகொள்பவனல்ல. நான் இந்நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்ல.

பேச்சுவார்தை. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கலந்துரையாடல், கலந்துரையாடல். வேறு வழிமுறைகள் இல்லை.

அப்போது நான் எப்படி JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே! ஆயுத போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்து கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!

அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.அது எங்களுக்கு இல்லை. ஆனால், அது JVPக்கு வழங்கப்பட்டுள்ளது.ஒன்றே ஒன்று, JVPயின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.ஆனால் சிலர், ஜேவிபியினர் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள், ஆனால், LTTE பயங்ரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.அதை நான் ஏற்க மாட்டேன். இதை தாங்கள் தேவைகளுக்காக சொல்லுகின்றனர். அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.

தொகுப்பாளர்:அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?

மனோ கணேசன்: ஒன்றாகும்! ஒன்றாகும்!

ஆயுத போராட்டம் என்பது, ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்வேண்டி ஆகும். புலிகளின் நோக்கம் வடகிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கிறார்கள்.

1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை JVP பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்கு தெரியுமாயிருக்க வேண்டும். அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்த கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும்தானே!

LTTE மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கை மட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர். ஜேவிபினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர்.

LTTE மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், JVPக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், அதை காரணமாக கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள். JVPயினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்.

எல்லோருமே ஆயுதங்களை ஏந்திதான் போராட்டங்களை செய்தனர். அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன்.

ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுகொள்வதும் இல்லை, அதை சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.ஆனால் அவர்கள் உயிரிழந்தனர்.

அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவர்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும். இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை.

அதனால் LTTE ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால்…, அந்த தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும், அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளை பற்றி பேசாமல், இறந்தோரை நினைவுக்கூர அவர்களுக்கு இடமளிக்கபட வேண்டும்.

தொகுப்பாளர்:ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லையே. அவர்கள் படங்களை பிரசுரிக்கின்றனர்?

மனோ கணேசன்:அதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மற்றும் தெற்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் சம்பூரணமாக நினைவுகூரவே கூடாது என்று கூறுகிறார்கள்.

இங்கே LTTE போராளிகள் மட்டுமல்ல, சதாரண மக்களும் யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், அவர்களை எவ்வாறு நினைவு கூறுவது? அதற்கு இடமளிக்க வேண்டும் அல்லவா?

ஜேவிபியினருக்கு நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளதே. இங்கே கொழும்பில், எம் தலைநகரத்தில் பாருங்கள். இம்மாதம் பாருங்கள். அவர்கள் நினைவு கூருவார்கள்.

இதற்கு ஒரு கலந்துரையாடல் அவசியம். என்னுடைய டுவீட்டர் செய்தி மூலம் இதுபற்றிய ஒரு தேசிய கலந்துரையாடலையே நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு தேசிய விவாதத்தையே எதிர்பார்க்கின்றேன்.

சிலர் என்னிடம் வந்து, LTTE வேறு, JVP வேறு என்று சொல்லுகின்றனர் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை பற்றி நான் கதைக்க போவதில்லை. அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா? “லெஜிடிமேட் கவர்ன்மன்ட் ஒப் ஸ்ரீலங்கா”, சட்டபூர்வமான இலங்கை அரசாங்கம், என்பதற்கு எதிராக அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா?

இப்போது இந்நாட்டில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கு உரிமை உள்ளது? காவல்துறைக்கும், இராணுவத்திற்கும்தான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது.

எனக்கும் மந்திரி என்பதால் அனுமதி பெற்ற பிஸ்டல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனக்கு அந்த அவசியம் இல்லை. ஆகவே என்னிடம் துப்பாக்கி இப்போது இல்லை. மற்றவர்களுக்கும் அதை வைத்திருக்க முடியும் ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை.

தவிர, அமைப்புரீதியாக யாருக்கும் ஆயுத போராட்டம் நடத்த முடியுமா? ஆயுதங்கள் சேகரிக்க முடியுமா? அதைதான், அதை மட்டும்தான் நான் பார்க்கின்றேன் இவர்களின் கொள்கைகளை நான் பார்க்கவில்லை. யுத்தத்தினை இருசாராரும்தானே செய்தார்கள்? நாம் இவர்களுக்கு இடமளிக்கின்றோம். அவர்களுக்கு இடமில்லை. அப்படியானால், தமிழ் மக்களின் மனம் புண்படுமல்லவா?

இப்போது பாருங்கள். தெற்கிலுள்ள தாய், தந்தையர்களுக்கு மற்றும் மக்களுக்கு தங்களுடைய உயிரிழந்த புத்திரர்களை நினைவுகூர உரிமை உண்டு. இந்த புத்திரர்களில் பெரும்பாலோர் JVP போராளிகள். தேசபிரேமி போராளிகள். அவர்கள் இந்நாட்டில் என்ன செய்தார்கள்?

ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொன்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்களை கொன்றார்கள். அரசியல்வாதிகளை கொன்றார்கள். ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.

நடந்ததுதானே? இல்லை என சொல்ல முடியுமா? 1971,1989ம் ஆண்டுகளில் நடந்ததா? இல்லையா? சொல்லுங்கள். இல்லையென கூற முடியுமா? இப்போது அந்த வழியை கைவிட்டு, மனம் மாறி, பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். நல்லது மற்றும் அழகானது.

தொகுப்பாளர்:கருணா அம்மானும் வந்திருக்கின்றார்.

மனோ கணேசன்:

EPDPயினர் வந்திருக்கின்றனர். PLOT தலைவர் சித்தார்த்தன் வந்திருக்கின்றார். TELO அமைப்பின், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை பாராளுமன்றத்தில், குழுக்களின் பிரதி தலைவராக இருந்திருக்கின்றார். இன்னமும் புதிதாக பலர் பாராளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் PLOT, EPDP, TELO, EPRLF அமைப்புகளில் இருந்தவர்கள். அவர்களும் ஆயுத போராட்டம் மேற்கொண்டவர்கள். அதேபோல LTTEகாரர்களும் வரலாம். ஏன், கருணா வந்து போனார். இப்போது பிள்ளையான் வந்திருக்கின்றார்.

தொகுப்பாளர்:உங்கள் வாதம் தர்க்கரீதியாக சரி. ஆனால், நாங்கள் இரண்டையும் நிறுத்து பார்தோமானால், LTTEயின் ஆயுத போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். அதனால் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட சேதம் அதிகம் அல்லவா? அதை நீங்கள் ஏற்றுகொள்ளுகின்றீரகளா?

மனோ கணேசன்:இல்லையில்லை. யுத்தம் நடக்கும் போது… JVPயின் காலத்தில் தொழிநுட்பங்கள் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் சாதாரண காட்டுத்துப்பாக்கிகளை பாவித்தனர். பின்னர் 1989ல் அவர்களும் முன்னேறி இயந்திர துப்பாக்கிகளையும் பாவித்தனர். இப்போது அல்லது எதிர்காலத்தில் இன்னொரு யுத்தம் வந்தால் அவர்கள் இன்னமும் முன்னேறுவார்கள்.

ஆயுத போராட்டம் நடந்தால், யுத்தம் நடந்தால் சேதம் ஏற்படத்தானே செய்யும். நான் அதை ஏற்றுக்கொள்பவன் அல்லவே. எனக்கு அது வேண்டாமே! நான் கதைப்பது அதையல்லவே.

அங்கு சேதம் அதிகம். ஆகவே அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இங்கு சேதம் குறைவு. அதனால் இங்கே இடமளிப்போம். இந்த தர்க்கம் பிழையானது. இது ஒரு பாரபட்சமான தர்க்கம். அப்படி செய்ய முடியாது. ஏன் தெற்கிற்கு மட்டும் ஒரு நீதி?

இப்போ பாருங்கள். இந்த அரசாங்க காலத்தில்தான் அதிகம் சொல்லப்படுகின்றது. “ஒரே நாடு: ஒரே சட்டம்” எனப்படுகிறது.

ஒரே நாடு, என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு யாரும் அதுபற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை. நான் சொல்கிறேன். இது ஒரே நாடுதான். அதற்குள் வேறொறு நாட்டை உருவாக்க முடியாது.

இது ஒரு நாடாகவும் இருக்க வேண்டும். அரசியல் இலக்குகளை அடைய ஆயுத வழியற்ற பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை என் பிரதான இரண்டு நோக்கங்கள். ஒன்று, இது ஒரே நாடு. இரண்டாவது, அரசியல் நோக்குகளை அடைய ஜனநாயகமற்ற பாதையில் செல்லாமல் இருப்பது. இது இரண்டும் எனது அடிப்படை. அதற்குள்ளேதான், நான் எல்லாவற்றையும் அளந்து, நிறுத்து பார்க்கின்றேன்.

அதற்குள் எல்லாமே வருகிறதுதானே? “ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்று இந்த அரசாங்கம்தானே சொல்கின்றது? ஒரே சட்டத்தை கொண்டுவர முடியுமோ என எனக்கு தெரியவில்லை. அதற்கு வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன.

கண்டியில் “மலைநாட்டு சிங்கள சட்டம்” உள்ளது. வடக்கில் “தேசவழமை சட்டம்” இருக்கின்றது. “முஸ்லிம் சட்டம்” இருக்கின்றது. இவற்றையெல்லாம் கலந்துரையாடி ஓரிடத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்படியென்றால் நல்லது. அப்படி ஒரே சட்டம் கொண்டு வரும் போது, அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

நான் சொல்வது அதனையல்ல. இப்படி சொல்லும் அரசாங்கம், இப்போது பாருங்கள், வடக்கிற்கும், கிழக்கிற்கும் வேறு சட்டத்தை அமுல் செய்வது போல் தெரிகிறதே. அங்கே நினைவுக்கூர முடியாது. தெற்கில் நினைவுக்கூர முடியும்.

அப்போது அது வேறொரு நாடா? வேறு நாடு இல்லை என நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் இதன் முலமாக வெவ்வேறு நாடுகள் என அரசாங்கம் சொல்லுகின்றது.

நாங்கள் இதை மனிதாபிமான கோணத்தில், மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு நினைவுகூர இடமளிப்பது, அவர்களுடைய கொள்கைகளை அப்படியே ஏற்கின்றோம் என்பதல்ல.சரி…, எனக்கு சொல்லுங்களேன். LTTE இப்போது எங்கு இருக்கின்றது?

2009 மே மாதம் 19 தினம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என உத்தியோகபூர்வமாக அக்காலத்தில் ஜனாதிபதி இப்போது பிரதமராக இருக்கின்றவர் பாராளுமன்றம் வந்து அறிவித்தார். அந்நேரத்தில் LTTE முற்றாக அழிக்கப்பட்டது எனவும், யுத்தத்தில் வெற்றி பெற்றோம் எனவும் தெரிவித்தார்கள்.

இப்போது சில இடங்களில், சில நேரங்களில், LTTE கொடிகளை ஏந்தி, சிலர் வெளிநாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு, அதை ஒரு பயங்கர பூதமாக காட்டி, காலம்பூராவும் சாதாரண தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முடியாது. இப்போது LTTE இல்லை.

மற்றபடி, வட-கிழக்கு மக்களின் இன்றைய மனப்பான்மையை நான் நன்கறிவேன். அவர்கள் இன்னுமொரு பயங்கர யுத்தத்திற்கு தயார் இல்லை. இப்பொழுது யாராவது ஆயுத போராட்டத்தை பற்றி பேசினால், பொலிஸ், ராணுவத்துக்கு முன், வட-கிழக்கு தமிழ் மக்கள் அதை எதிர்ப்பார்கள். ஆகவே இந்த பின்னணியில்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles