நியூசிலாந்தின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது! பாகிஸ்தான் பாய்ச்சல்!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெறவிருந்தது.

இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி திடீரன இரத்து செய்தது. அந்நாட்டு அரசு எச்சரிக்கை வெளியிட்டதால் நியூசிலாந்து கிரிக்கெட் சபை திடீரென இந்த முடிவை எடுத்தது. அந்நாட்டில் இருந்து நியூசிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

நியூசிலாந்து அணி திடீரென தொடரை கைவிட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடும் கோபத்தில் உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவரும், முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கூறியதாவது:-

” நியூசிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமானது. வெறும் பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக தொடரில் ஆடாமல் வெளியேறுவது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.

நியூசிலாந்து தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்து உள்ளது. போட்டிகளின் போது பலத்த பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது. எங்கள் பிரதமர் இம்ரான்கானும் இது தொடர்பாக நியூசிலாந்து அரசுடன் பேசினார். நியூசிலாந்து அணிக்கு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்றார்.

இதற்கிடையே தொடரை விளையாடாமலேயே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கிறது.

நியூசிலாந்து அணியின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.

Related Articles

Latest Articles