கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர் பாதாள குழுவுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஆட்டோவில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
‘படா ரஞ்சி’ என அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.










