நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு பதிவானது.
எண்டன் தாஸ் (வயது 32) , நாதன் ரீட்டா (வயது 32) ஆகிய இருவரும் திருமணம் முடித்து எட்டு மாதங்கள்தான் கடந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பின் என்டன்தாஸின் தாயார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளவை வருமாறு,
” மகன், மருமகள் மற்றும் நானும் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம். திங்கட்கிழமை இரவு எனது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது,
நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் விழுந்து காணப்பட்டார்.
மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடக்கின்றாள் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார். நான் அயலவர்களை அழைப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது,
பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டனர் என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் நீதவான் விசாரணைக்கு பிறகு சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் என மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
(டி.சந்ரு செ.திவாகரன்)
