” யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பங்காளிக்கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிராகரிக்கவில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மொட்டு அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடனும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தியிருந்தனர். அதேபோல ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக கடிதமொன்றையும் அனுப்பியிருந்தனர்.
அந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடுமாறு பங்காளிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பங்காளிகளின் அழைப்பை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை எனவும், பேச்சு நடத்த வேண்டிய தரப்புகளின் பெயர்களை சுட்டிக்காட்டியிருந்தார் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.