யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயை வளர்த்த இருவரையும், குழந்தையின் தந்தையும் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது , குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை , உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
