அரசியலில் பச்சோந்தியாக இருக்கும் வடிவேல் சுரேஸிற்கு மலையக முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எனவே, வடிவேல் சுரேஸ் போன்ற பச்சோந்திகள் குறித்து முஸ்லிம் மக்கள் அவதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று பின்னர் எங்களிடம் வருவதற்கு முயற்சிப்பார்கள். அவர்களின் சமூகத்திற்கே உண்மையாக இல்லாதவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையாக இருப்பார்கள் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதுளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முஸ்லிம் மக்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தூர நோக்குடைய இளம் தலைவர்களை மக்கள் தேர்ந்ததெடுக்க வேண்டும் எனவும், அதற்கு செந்தில் தொண்டமான் மிகப் பொருத்தமானவர் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இனவாதம், மதவாதம், குலவாதம் ஆகியவற்றில் சிக்கியிருந்து இதனை செய்ய முடியாது என்றும், அனைத்து இலங்கையரையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும் என்றும், இலங்கையர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இன, மத வேறுபாடுகளைக் கடந்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும் என்றும் இதற்கு பதுளையில் செந்தில் தொண்டமான் போன்றவர்கள் பொருத்தமானவர்கள் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.