“ எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்ததால், ஆட்சியை பறிகொடுத்தார்.
பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் இமானுவேல் மேக்ரான், “எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது பதவிக்காலம் முடியும் (2027 மே மாதம்) வரை நான் பதவியில் நீடிப்பேன். நீங்கள் எனக்கு வழங்கிய பதவியை, ஐந்து ஆண்டுகள் வரை முழுமையாக இருந்து கடமையாற்றுவேன். வரவிருக்கும் நாட்களில் நான் ஒரு பிரதமரை நியமிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.