நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது என தெரியவருகின்றது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களுக்கே இவ்வாறு இராஜினாமா செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதும் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயம் என்றும் அது பிரதமர் வெளியேறிய பின்னர் அமைச்சரவை கலைவதைப் போன்றதாகுமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்தின் படி ஆளுநர்கள் பதவி விலகாததால் அவர்கள் சுயேச்சையாக பதவி விலகும் வரை ஜனாதிபதி சில காலம் காத்திருந்ததாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி நாடு திரும்பியதும் நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.