பதுளையில் களமறங்கும் டலஸ் அணி! ‘பட்ஜட்’ தொடருக்கு பிறகு ‘மாஸ்டர் பிளேன்’

2023 ஆம்  நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியே பாதீட்டை முன்வைத்து உரையாற்றுவார்.
பின்னர் 15 ஆம் திகதி முதல் பாதீடுமீதான விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 8 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி முதல் ஞாயிறு மற்றும் போயா தினங்களைதவிர ஏனைய நாட்களில் சபை தொடர்ச்சியாக கூடும்.
நாடாளுமன்றத்தில் பாதீடு நிறைவேறிய பின்னர், நாடாளுமன்றத்துக்கு ஒரு மாதகால விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலங்களில் அரசியல் பிரமுகர்கள் குடும்பம் சகிதம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள். மேலும் சிலர் உள்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு போவார்கள். இம்முறையும் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் தற்போதிருந்தே இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான ‘சுதந்திர மக்கள் சபை’யினர் பதுளைக்கு சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
ரயில் மூலமே இப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அவர்கள், சுற்றுலாவுக்கு சமாந்தரமாக கட்சி பணிகளையும் மேற்கொள்ள உத்தேசித்துள்ளனர்.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ரயில் பயணங்களை மேற்கொள்வாரா என தெரியாது, எனினும், அவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் சிலர் டலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles