பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலை தோட்டம் முடக்கம் என்ற செய்தியில் உண்மையில்லை : மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்பட்டுள்ளதாக தகவல்
பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலைத் தோட்டம் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தியொன்று பதியப்பட்டிருந்தது. எனினும், குறித்த தோட்டம் முடக்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேமலை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.
கொரோனா தொற்றாளரென்று ஊர்ஜிதமாகிய ஒருவர், பதுளைப் பகுதியின் ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு வந்து சென்றதையடுத்து, அம் மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது நிரம்பிய பெண் 25-10-2020 அன்று மரணமாகியதையடுத்து, அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் வந்துள்ளார். இவர், பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார்.
மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட எஸ். சிவராஜா என்ற நபர், மீளவும் ஹட்டன் சென்றதும், இவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். அப் பரிசோதனையில் அந் நபர் “கொரோனா தொற்றாளர்” என்பது ஊர்ஜிமாகியுள்ளது.
அதன் பின்னர், அந் நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே, பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் நேற்று குறுித்த தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.
அத் தோட்டத்திற்கு விரைந்த பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் குறிப்பிட்ட மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ, இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளி வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது பதுளை செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த தோட்டம் முடக்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குருவிக்குத் தெரிவித்தார்..
பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இதுகுறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் இந்தத் தோட்டத்தில் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.