‘பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்’ – இராணுவத் தளபதி

வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள், இலங்கையில் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர்.இதற்காக முன்னாள் போராளிகளையும், வறுமையில் இருப்பவர்களையும் அவர்கள் இலக்குவைக்கின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் கடந்தகாலங்களைப்போன்றே முறியடிக்கப்படும்.”

இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சூளுரைத்தார்.

முன்னாள் பெண் போராளியொருவர் கிளைமோருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் அமைப்பில் சிறது காலம் இருந்த பெண்ணொருவரே யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி குறித்த கிளைமோரை தனது கணவர் குழந்தை சகிதம் எடுத்துசென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர்தான் இதனை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு பின்பகுதியில் இருந்து கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

2009 இல் புலிகள் அமைப்பை இலங்கை நிலப்பரப்பில் நாம் தோற்கடித்தோம். எனினும், வெளிநாட்டில் வாழும் புலி உறுப்பினர்கள் புலிகளின் பிரிவினைவாத கருத்தாடலுக்கு உயிர்கொடுக்கின்றனர். உள்நாட்டிலுள்ள சிலரும் அதற்கு ஒத்துழைக்கின்றனர்.  வடக்கில் ஸ்தீரமற்றதொரு நிலையை உருவாக்குவதே அவர்களின் இலக்கு. இதற்கு முன்னரும் முயற்சித்தனர். அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இனியும் அதற்கு இடமளிக்கப்படாது. அவர்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம்.

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். வறுமையில் வாடுபவர்களும் இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பணம் வழங்கியே ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles