பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் இலங்கை பொருளாதாரத்துக்கும் பெரும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.

நாடாளுமன்றத்தில் இன்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அமெரிக்க விவகாரம் மற்றும் இந்திய பிரதமர் மோடியின் வருகை என்பன பேசுபொருளாக மாறக்கூடும்.

மேற்படி விவகாரங்கள் தொடர்பில் எதிரணியின் கேள்விக்கணைகளைத் தொடுக்கவுள்ளனர் என தெரியவருகின்றது.
இன்று முதல் 10 ஆம் திகதிவரை சபை அமர்வுகள் நடைபெறும்.

இதற்கமைய இன்று 8ஆம் திகதி முற்பகல், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதம் நடைபெறும்.

சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை மீட்பதற்குரிய சட்ட ஏற்பாடுகள் அவை.
அதன்பின்னர் பி.ப 5.30 மணிக்கு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஏப்ரல் 10ஆம் திகதி “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதம் நடைபெறும்.

Related Articles

Latest Articles