சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது. யார் என்ன சொன்னாலும், இது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஒரு பாரிய பிரச்சினையாகும்.
முன்னர் இடம்பெற்ற சிறைச்சாலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம். எனினும், ஆளுங்கட்சியில் உள்ள 152 பேர் அதற்கு எதிராக வாக்களித்து, அப்பிரேரணையைத் தோற்கடித்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்த வெற்றியின் பின்னர்தான் மஹர சிறைச்சாலையில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அது மகசின், குருவிட்ட, பள்ளன்சேன எனப் பல சிறைச்சாலைகளுக்கும் நீண்டு சென்றுள்ளது.
எனவே, இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரம் மற்றும் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினையாகக் கருதி அரசாங்கம் உடனடியாகச் தொழிற்பட வேண்டும்” எனக் கூறினார்.
