பறிபோகிறது அருந்திக்கவின் பதவி! ஜனாதிபதி அதிரடி!!

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கு, அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் எனவும், இது சம்பந்தமாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்வரை இராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டாமென பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கினார் எனவும் தெரியவருகின்றது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் அமைச்சுக்குரிய வாகனமும், அவரின் அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டமை தெரியவந்தது.

அதேவேளை, அருந்திக்க பெர்ணான்டோவின் மகனும் இச்சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்படி சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்படுமானால் அமைச்சு பதவி துறக்கப்படும் என அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles