” பல்கலைக்கழங்களுக்கு பணத்தைக் கொடுப்பதைவிட மாணவர்களுக்கு வழங்க வேண்டும்”

பல்கலைக்கழங்களுக்கு பணத்தைக் கொட்டுவதைவிட, மாணவர்களுக்கு விசேட கடன் அடிப்படையில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போகும் என்றும் மாணவர்கள் தம்மை தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள் என்றும், அவர்கள் தொழிலுக்குச் சென்ற பின்னர் அந்தக் கடனை மீளப் பெற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த முறைமை அமெரிக்காவில் இருப்பதாகவும், இதனையே இலங்கையில் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்களை அமைத்து, மாணவர்களுக்கு கடன் வசதிகளை வழங்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்கு பணத்தைக் கொடுப்பதை விட இந்த முறைமை சிறந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இப்படிச் செய்த பின்னர் பல்கலை மாணவர்கள் இலவசக் கல்வியைப் பெற்று, பட்டம் பெற்ற பின்னர் வெளிநாடுகளுக்குச் செல்வதில் பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தார். தற்போதுள்ள முறைமையில் இலவசக் கல்வியின் மூலம் மருத்துவப் பட்டம் பெற்று, அவர்கள் வெளிநாடு செல்வதாகவும் இதனால் நாடு என்ற வகையில் பெரும் இழப்புக்களைச் சந்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையை கல்வியின் கேந்திர நிலையமாக மாற்றுவதன்  மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்த்துக் கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்களினால் இழக்கப்படும் (குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்) அந்நியச் செலாவணியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் எனவும், வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பதன் மூலம் மேலும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்புக்களைச் செய்ய முயற்சிக்கும்போது ஒருசிலர் தன்னைத் திட்டுவதாகவும், ஆனால் இந்த மறுசீரமைப்புக்கள் அவசியமானவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தன்னைத் திட்டினாலும், இந்த மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு பாராளுமன்றம் ஆதரவளித்தால் தான் இதனை செய்துமுடிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles