அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சபாநாயகர் அறிவிப்பு வேளையின் போது இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதைச் சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மனுக்கள் எதிர்த்தே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனைகளின் பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளை, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன், 25 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தியிருந்த போதிலும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் சரத்துகள் எதுவும் சட்டமூலத்தில் சேர்க்கப்படவில்லை என ஆளுங்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
