பஸில் நாடு திரும்பிய பிறகே வேட்பாளரை தீர்மானிக்குமாம் மொட்டு கட்சி!

“ பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் இறுதி தருவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். எனவே, வெற்றி வேட்பாளர் ஒருவரை நிச்சயம் களமிறக்க வேண்டும். உரிய வகையில் வியூகம் அமைத்து, கட்சியாக கூடிய முடிவெடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன, எனினும், அதுவரை காத்திருக்கமாட்டோம், பஸில் ராஜபக்ச ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார், அவர் வந்த பின்னர் முடிவெடுக்கப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியே முன்னிலையில் இருக்கின்றது. கூட்டணியாகவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles