பாகிஸ்தான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பாகிஸ்தான் பிரதமர்   இம்ரான் கான் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று (2021.02.23) வரவேற்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த  இம்ரான் கான் , பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராவார். பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து   இம்ரான் கான்   இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், 2021ஆம் ஆண்டிற்கான அவரது முதலாவது வெளிநாட்டு பயணமாகவும் இது அமைந்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான பிரதமர் கௌரவ இம்ரான் கானை வரவேற்கும் பொருட்டு 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் விமான நிலையத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு குறிப்பில் (கோல்டன்   புக்) கையெழுத்திட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் கௌரவ பிரதமர்கள் இருவரின் பங்கேற்புடன் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்ளிட்ட  தூதுக்குழு பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் அவர்கள் நாளைய தினம் (24)   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்கள் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக இலங்கை வீரர்களையும் சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles