பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 16 யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 63 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட பாகிஸ்தான் நாட்டு ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதே போல இர்ஷாத் பட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் பாரூக் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ரெஃபரென்ஸ், சாமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராஸி நாமா உள்ளிட்ட சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் திகதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்துக்கு பிறகு, இந்த சேனல்கள் தவறான தகவல்கள் மற்றும் பிரிவினையை தூண்டும் வகையிலான கருத்தை பரப்புவதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல் உறுதி செய்துள்ளன.
தடை செய்யப்பட்ட சேனல்களை அணுக முயற்சிக்கும் இந்திய பயனர்களுக்கு இப்போது யூடியூப் பக்கத்தில் ஒரு மெசேஜ் கொடுக்கப்படுகிறது. ‘தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் உத்தரவு காரணமாக இந்த யூடியூப் பக்கத்தின் கன்டென்ட் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.