” பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுகின்றனர் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. எனவே, இவ்வாறான தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை பரப்பி, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் இணையவழி குற்ற விசாரணை பிரிவும், புலனாய்வு பிரிவும் விசாரணைகளை நடத்திவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளை கடத்த முயற்சித்தனர் என இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன எனவும், அவை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிள்ளைகளால் பெற்றோருக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறார்கள் கடத்தப்படுகின்றனர் என கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவை உண்மையில்லை என தெரியவந்துள்ளபோதிலும், முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
