ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது.
நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட பாதுகாப்பு கூட்டமொன்று சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை முன்னெடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு புறம் மக்கள் கொந்தளிப்பு. மறுபுறத்தில் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழப்பு என இரு முனை தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான சாதாரண பெரும்பான்மையையும் இன்று இழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடும் என்பதால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு அதி முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
” இந்த அரசு பதவி விலக வேண்டும். மாறாக பதவியை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 50பேர்வரை சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நேற்று தகவல் வெளியிட்டார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சபையில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
அத்துடன், விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை விடுக்கவுள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று 11 கட்சிகளின் கூட்டணியில் இணையக்கூடும் என்பதால் அரசு சாதாரண பெரும்பான்மையை இழப்பது உறுதியென கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
” நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.” – என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை வளைத்போட்டு கூட்டரசு – இடைக்கால அரசு அமைக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. இதற்கிடையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, காபந்து அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனவே, அடுத்துவரும் 48 மணிநேரம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு எவ்வாறு சாதாரண பெரும்பான்மையை இழக்கும் என்பது தொடர்பில் ஏப்ரல் 03 ஆம் திகதி பதவிட்டிருந்தேன். அந்த அட்டவணை – புதிதாக ஏற்பட்ட மாற்றங்களுடன் பதிவிடப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் –





அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள 09 பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க
8. சுதர்ஷினி
9. பிரியங்கர







ஆர்.சனத்