அரசாங்கத்தின் பாற்பண்ணைத் திட்டத்தை நான் வரவேற்கின்றேன். அதனை எங்களுடைய பெருந்தோட்ட மக்களுக்கு சார்பானதாக அமைய வேண்டும். அவ்வாறான ஒரு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் தலைவருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர ஊடகங்களுக்கு இன்று (12.09.2021) கருத்து தெரிவிக்கையில்
அரசாங்கம் கொண்டுவருகின்ற திட்டங்களை எதிர்ப்பதனால் எந்த நன்மையும் நமக்கு கிடைக்காது. கொண்டுவருகின்ற திட்டங்களில் நாம் எவ்வாறு பயன்பெறமுடியும் எமது மக்களுக்கு அதில் பெறக்கூடிய நன்மைகள் என்ன என்பது தொடர்பாக சிந்தித்து அதற்கேற்றவகையில் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடாத்தி அந்த திட்டத்தில் எங்களுடைய மக்களை உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
அபிவிருத்தி திட்டங்களை எதிர்ப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது.இந்த திட்டத்தை அரசாங்கம் எங்களுடைய மக்களுக்கு ஊடாக நடைமுறைபடுத்துமாக இருந்தால் காணி வெளியாருக்கு செல்லாது.மலையக இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.மேலும் மலையக இளைஞர் யுவதிகள் வெளி இடங்களுக்கு சென்று வேலைவாய்ப்பை நாட வேண்டிய தேவை வராது.
எனவே அரசாங்கம் கொண்டு வருகின்ற இந்த திட்டமானது மிகவும் வரவேற்கக்கூடிய காலத்திற்கு ஏற்ற திட்டமாகவே நான் கருதுகின்றேன்.இந்த திட்டத்தில் எங்களுடைய மக்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் அதற்கான கடன் வசதிகள் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் எமது மக்கள் முழமையான நன்மைகளை பெற முடியும்.
மேலும் பாற்பண்ணை வளர்ப்பில் எங்களுடைய மக்களுக்கு நீண்ட கால அனுபவம் இருக்கின்றது.அவர்கள் கால்நடை வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்கள்.எனவே இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடிய இடமாக மலையகமே இருக்கின்றது.
இதன் மூலம் அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.அவர்களும் பாற்பண்ணை உரிமையாளர்களாக மாறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. அவர்கள் கடந்த 200 வருடகாலமாக தேயிலை தொழிலில் மாத்திரமே ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த திட்டத்தை மலையக பகுதிகளில் ஆறிமுகம் செய்வதன் மூலமாக எங்களுடைய மக்களுக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.எனவே அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்ப்பதைவிட்டுவிட்டு அந்த திட்டத்தில் எமது மக்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது தொடர்பாக அனைவரும் சிந்தித்து அதன பங்குதாரர்களாக நாம் மாற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு