பலாங்கொடை தேர்தல் தொகுதியில் வலேபொட ராஸணாகந்த பாதையில் வளவே ஆற்றினை கடக்கும் இடத்தில் பாலம் ஒன்று இன்மையால் தேயிலைக் கொழுந்தினை எடுத்துச்செல்லும் பிரதேச மக்கள் பாரியளவில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலைமை காரணமாக ராவணாகந்த பிரதேசத்தில் வசிக்கும் சிறிய தேயிலை தோட்ட விவசாயிகள் பல கஷ்டங்களுக்கு ஆளாகி உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இப்பகுதியில் வளைவை ஆற்றின் ஊடாக வாகனங்கள் பயணிக்க கூடிய விதத்தில் பாலம் ஒன்றை நிர்மாணித்து தருமாறு பலாங்கொடை இம்புல்பே பிரதேசசபை எல்லைப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது விடயமாக இம்புல்பே பிரதேசசபை தலைவர் ஸ்ரீ லால் செனரத்திடம் வினவியபோதே அவர் தெரிவித்ததாவது இப்பகுதிக்கு பாலம் ஒன்றை நிர்மாணிக்க கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கீகாரம் கிடைத்த போதிலும் 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் மாறியமையால் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இப்பகுதிக்கு பாலம் ஒன்று வளவை ஆற்றுக்கு ஊடாக அமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் இனம் கண்டு உள்ளோம். இதற்காக பெருந்தொகையான நிதி தேவைப்படுகின்றது. எனவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த பாலம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.