பாலஸ்தீன அரச தலைவர் மஹ்மூத் அப்பாசுடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
காசாவில் போர் ஆரம்பமாகி பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதே முதன்முறையாக பாலஸ்தீன அரச தலைவருடன், ஆஸ்திரேலிய தலைவர் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ‘ பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் அமைதியை அடைவதில் ஆஸ்திரேலியா முக்கியமான பங்கை வகிக்க முடியும் என்று மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் அல்பானீஸியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தாலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து மௌனம் காத்துவருகின்றது.
இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற வரலாறு காணாத பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தால், இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை லேபர் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாலஸ்தீன அரச தலைவருடன், பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.
அதேவேளை, காசாவில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆஸ்திரேலியா வழங்கிவரும் பங்களிப்புக்கு பாலஸ்தீன அரச தலைவர் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமருடனும் கலந்துரையாடலில் ஈடுபட , ஆஸி. பிரதமர் திட்டமிட்டுள்ளார்.