பின்வாங்கியது இஸ்ரேல்: ஈரானுக்கு பதிலடி கொடுக்காதது ஏன்?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

சுமார் 200 இற்கு அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99 வீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியான எந்த திட்டமும் இல்லையென இஸ்ரேல் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கலந்துரையாடியுள்ளார். அப்போது, ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் உதவ மாட்டோம் என்று பைடன் தெளிவுப்படுத்திவிட்டார். இருவருக்குமான உரையாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தாலும், என்ன பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெள்ளை மாளிகை மற்றும் டெல் அவிவின் நெருங்கிய வட்டாரங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவ முன்வரவில்லை என்கிற தகவலை தெரிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே ஹமாஸை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்திய எல்லா தாக்குதலுக்கும் அமெரிக்கா துணை நின்றிருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். இந்த சூழலில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உதவினால், அது நிச்சயம் 3ம் உலகப் போராக வெடிக்கும்.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை வரிசைகட்டி நிற்கும். எனவே இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜோபைடன் கூறியுள்ளார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு ஈரான் ஏவிய ஏவுகணைகளை சமாளிக்க 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செலவு செய்திருக்கிறது.

எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதல் என இறங்கினால் ஈரான் சும்மா இருக்காது. இவையெல்லாம் செலவுகளை இழுத்துவிட்டுவிடும் என்பதாலும், அமெரிக்கா இதில் மௌனம் காக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. எனவே இஸ்ரேல், ஈரான் மீதான பதிலடி தாக்குதலை கைவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles